அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 14ஆம் தேதி அதிகாலை கைதுசெய்தனர். அப்போது, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்டது. 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில் அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன. இதனையடுத்து தனி அறையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அமலாக்கத்துறையும் 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ஆணையிட்டிருந்தார். ஆனாலும் ஆபரேசன் செய்த செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினரால் விசாரணை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி எப்படி இருக்கிறீர்கள் செந்தில் பாலாஜி என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி, பைபாஸ் ஆபரேசன் நடைபெற்றதால் உடலில் வலி இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து செந்தில் பாலாஜியை வரும் ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.