2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் கடந்த 9 ஆண்டுகால பாஜக அரசின் சாதனைகளை விளக்கி கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். அப்போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
கடந்த காலங்களில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை, 9 ஆண்டுகளில் பாஜக மோடி அரசு மக்களுக்கு செய்து தலைசிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் 2ஜி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி ஊழல் என தொடர்ந்தது. மட்டுமல்லாது, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமைச்சரை முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க மறுக்கிறார்.
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி, கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடையும் வகையில் வங்கி கணக்குகளை ஏற்படுத்தி, மானியத்தை வழங்கியது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான். கடந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்த மிகப்பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று. ஏழை, எளிய மக்களுக்காக ரூ.5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு, புதிய தேசிய கல்விக் கொள்கை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பாஜக செய்து கொடுத்திருக்கிறது. குறிப்பாக 9 புதிய ரயில் தடங்கள் மற்றும் தொழில் முனைவோருக்காக பிஎம் மித்ரா திட்டம், தமிழகத்துக்கு என ஒரு தொழில் பூங்காவையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது மாநிலத்தின் வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். உலக அளவில் இந்தியா தற்போது 5வது பொருளாதார நாடாக உள்ளது. இதே 2025ம் ஆண்டில் நாடு 3வது பொருளாதார நாடாக உருவாகும். உலக நாடுகளே இந்தியாவை எதிர்நோக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறார் மோடி. ஐ.நா சபையில் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று முழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர். தொடர்ந்து மக்களுக்கு மோடி அரசு சேவை செய்ய 2024 மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.