100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவதில் பல விதிமுறைகளை பா.ஜ.க. அரசு புகுத்தியிருக்கிறது. இதன்படி வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிற பி.பி.எல். அடையாள அட்டை இருந்தால் தான் வேலை வழங்க வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொது விநியோகத் திட்டத்தில் அத்தகைய நடைமுறை கையாளப்படுவதில்லை. அதேபோல, 100 நாள் வேலை திட்டத்திலும் பி.பி.எல். அட்டை இருப்பவர்களுக்கு தான் வேலை என்று இதுவரை நிர்ப்பந்தம் செய்ததில்லை. ஆனால், சமீபத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதித்துள்ள நிபந்தனையின்படி 100 நாள் வேலை திட்டத்திற்கு பி.பி.எல். அட்டை கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் கிராமப்புற தொழிலாளர்களிடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பதற்கான பி.பி.எல். அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படும் என்கிற ஒன்றிய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.