அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஆளுநர் செயலுக்கான பதிலை நாளை(இன்று) முதல்வர் ஸ்டாலின் சொல்வார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி ஆளுநரால் நீக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது அவருக்கே தெரியவில்லை. ஆளுநர் மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்பட வேண்டியவர், ஒருவரை அமைச்சரவையில் வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்ற அதிகாரம் முதலமைச்சருக்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் இதுபோன்று முடிவெடுத்தால் ஆட்சி நடத்த முடியுமா? இது ஜனநாயக நாடா? ஆளுநரின் சர்வாதிகார நாடா? நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு செய்வார்கள். ஆளுநரின் செயலுக்கான சரியான பதிலை நாளை(இன்று) முதலமைச்சர் கூறுவார்” எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.