டெல்லியில் இருந்து அம்பை எய்கிறார்கள், இப்போதுதான் டெல்லி போய்விட்டு வந்தார் ஆளுநர் ரவி டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார் என விமர்சித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அண்மையில் கைது செய்தனர். அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் இலாகாக்கள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி முதலில் அனுமதி மறுத்த நிலையில், மீண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று அறிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், ஆளுநரின் செயலைக் கடுமையாக கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாகப் பேசியுள்ள சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
இந்த அளவுக்கு ஆளுநர் மோசமாக நடந்து கொள்வதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசுதான். மோடி அரசு தான் ஆளுநரை பயன்படுத்தி இதையெல்லாம் செய்கிறது. மோடியும், அமித் ஷாவும் தான் அரசியல் சாசனம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இஷ்டம்போல செய்கிறார்கள். மத்திய அரசை கேட்காமல் ஆளுநர் இப்படி செயல்படுவாரா? இப்போதுதான் டெல்லி போய்விட்டு வந்தார் ஆளுநர் ரவி. டெல்லியில் சொல்வதை அப்படியே நிறைவேற்றுகிறார். ஆளுநருக்கு சொந்த புத்தி கிடையாது, சுய சிந்தனை கிடையாது. டெல்லியின் கைப்பாவையாக இருக்கிறார் ஆளுநர். அரசியல் சட்டம், அதிகாரம் என்ன உள்ளது என்பதைப் பற்றி கவலை இன்றி, மோடி அரசு சொல்வதை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.