அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு பிறகு ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை காவிரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உத்தரவிட்டார். பல்வேறு குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும், எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ரவி நீக்கியுள்ளார் என்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவில்லை. அவ்வாறு அவர் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார். ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால் அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.