பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஓராண்டைக் கடந்து இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பக்க பலமாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. ரஷ்யாவின் அதிகார தலைமையை மாற்றுவோம் என மாஸ்கோ நோக்கி வாக்னர் குழு சென்றது. எனினும், பெலாரஸ் அதிபர் தலையீட்டால் ரஷ்யாவுக்கு எதிரான வாக்னர் குழு கலகம் முடிந்தது. இதன் காரணமாக புதினுக்கு ஏற்பட இருந்த பெரும் நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது உக்ரைன் விவகாரம் மற்றும் வாக்னர் குழு கலகம் உள்பட பல்வேறு விவகாரம் தொடர்பாக இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. எனினும் இந்த உரையாடலின் முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவின் சிறந்த நண்பர் என அந்த நாட்டு அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். மாஸ்கோவில் ரஷ்ய அரசு அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கலந்தாய்வு மன்றத்தில் அதிபர் விளாடிமிர் புதின் உரை நிகழ்த்தினார். அப்போது பிரதமர் மோடியையும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தையும் அவர் வெகுவாக பாராட்டி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள நமது நண்பர்களும், நமது மிகச்சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியும் சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை தொடங்கினார்கள். இந்த திட்டமானது இந்திய பொருளாதாரத்தில் உண்மையிலேயே ஈர்க்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை உருவாக்கியவர்கள் நாம் அல்லாமல் நம் நண்பர்களாக இருந்தாலும், நன்றாக செயல்படுவதை பின்பற்றுவது எந்த தீங்கும் செய்யாது என்று புதின் கூறினார். மேலும் உள்ளூர் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வதற்கும் பயனுள்ள மாதிரியை உருவாக்கியதற்காக இந்தியாவை அவர் பாராட்டினார். உள்நாட்டிலேயே தயாரிப்புகளை உருவாக்குதல், உற்பத்தி செய்தல், அதற்கான நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றுக்காகவும், இதற்காக அர்ப்பணிப்பு முதலீடுகளை பெறும் நோக்கத்துடனும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.