தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய மருத்துவர் நாளையொட்டி மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதல்வர் என்ற பெருமைக்குரிய மறைந்த டாக்டர் பிதான் சந்திர ராய் பிறந்த தினத்தை தேசிய மருத்துவர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். 1882ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்த டாக்டர் பிதான் சந்திர ராய் 1962 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தனது 80 வது வயதில் மறைந்தார். முதலமைச்சராக இருந்த போதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவச மருத்துவம் செய்து வந்த இவரது சேவையை நினைவு கூறும் வகையில், மருத்துவர்களின் பணியை போற்றும் வகையில் ஜூலை ஒன்றாம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மருத்துவர்கள் தினத்தன்று, அனைத்து மருத்துவர் சமூகத்திற்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடினமாக உழைக்கக்கூடிய, உயிர்களைக் காப்பதிலும், நமது பூமியை ஆரோக்கியமாக மாற்றுவதிலும் முக்கியப் பங்காற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் என வாழ்த்துகள். மருத்துவர்களின் அர்ப்பணிப்பு நம் சமூகத்திற்கு நம்பிக்கையையும் பலத்தையும் தருகிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல்நலனும் உள்ளநலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள்! மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்துகொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான். அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள். அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளும் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்பட மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “அன்னையும், தந்தையும் படைக்கும் கடவுள்கள் என்றால், மருத்துவர்கள் தான் மக்களைக் காக்கும் கடவுள்கள் ஆவர். அவர்கள் இல்லாமல் மனித உடலில் ஓர் அணுவும் அசையாது. மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவராக பணியைத் தொடங்கி மேற்கு வங்கத்தின் முதல்வராக உயர்ந்த மருத்துவர் பி.சி. ராயின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் பி.சி.ராய். உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் கேடுகளையும் அகற்ற வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்களால் சாதிக்க முடியும். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.