“இறுதியில் சமூக நீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரை இலக்கியமே மாமன்னன்” என படத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தொல்.திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சமூக நீதிக்கும் சாதி ஆதிக்க வெறிக்கும் இடையிலான கரடுமுரடான முரண்களை விவரிக்கும் கலைச் சித்திரமே இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’. சாதி ஒரு கருத்தியலாக மட்டுமின்றி; அது ஒரு கலாச்சாரமாகவும் வலுவடைந்து கெட்டித் தட்டிக் இறுகிக் கிடக்கிறது. அதனைத் தகர்ப்பது என்பதைவிட; தளர்வுறச் செய்வதே ஒரு பெரும் போராகும். அப்போரினை குருதிக் களத்தில் விவரிப்பதே மாமன்னன்.
இறுதியில் சமூகநீதியே வெல்லும் என உரத்தும் பேசும் திரைஇலக்கியமே மாமன்னன். சபையின் நாயகமாக சமூகநீதியை அமர வைக்கும் அதிவீரனின் மாபெரும் வெற்றியே மாமன்னன். அன்பு இளவல்கள் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். பாராட்டுகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கிற பாகுபாட்டை படத்தின் கருப்பொருளாக எடுத்து சாதி வெறிக்கும் சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் உணர்த்தியுள்ளார். நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு எல்லாரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பிறகு மாமன்னன் வெற்றி அறிவிப்பு என்பது 2019 சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தை நினைவுப்படுகிறது. இமானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்ததால் தான் கொல்லப்பட்டார். இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.