நிர்மலா சீதாராமனை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து ஆலோசனை!

கனகசபை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தமிழக அறநிலையத்துறைக்கும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தீட்சிதர்கள் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சிதம்பரம் தீட்சிதர்கள் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீட்சிதர்களுக்கும், தமிழக அறநிலையத்துறைக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் உடனான இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.

சிதம்பரத்தில் உள்ள நடராஜன் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே, இந்தக் கோயிலில் உள்ள கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தமிழக அரசு, எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த மே மாதம் அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, நிதி மோசடி, குழந்தை திருமணம் என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சிக்கி வருகின்றனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் கோயில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அறநிலையத்துறை முயன்று வருகிறது. இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழலில்தான், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் குழு திடீரென டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. சிதம்பரம் கோயிலில் தற்போது என்னென்ன பிரச்சினைகள் நடந்து வருகின்றன; அறநிலையத்துறை எப்படி தங்களை தொந்தரவு செய்கிறது என இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமனிடம் தீட்சிதர்கள் குழு எடுத்துக் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.