வடமதுரையில் மைல் கல்லில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்த திமுகவினர்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி அழித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் வடமதுரை பகுதியில் மைல் கற்கள் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தன. இந்த புதிய மைல் கற்களில் வடமதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டன. இதனையடுத்து வடமதுரை திமுகவினர் திருச்சி நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்ட மைல் கற்களை சூழ்ந்தனர். பின்னர் இந்தி திணிப்பு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி, இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர்.

வடமதுரை பேரூர் திமுக செயலாளரும் கவுன்சிலருமான மெடிக்கல் கணேசன் சவடமுத்து தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி அழித்ததால் வடமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. வடமதுரையில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களும் சமூக வலைதலங்களில் பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தி எழுத்துகள் மைல் கற்களில் இடம்பெறலாமா? கூடாதா? என்பது தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் நிகழ்ந்து வருகின்றன.