மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. அதேபோல, காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி பாகுபடின்றி தமிழ்நாடே எதிர்த்து நிற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட கோரிக்கை மாநாடு காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் லதா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் பணியைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்கிறார். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையையும், கலவரத்தையும் உருவாக்குவதற்கான அனைத்து முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையம் அறிவித்துள்ளபடி கர்நாடகம் தமிழகத்திற்குரிய உரிய நதிநீர் பங்கீட்டினை உடனடியாக வழங்க வேண்டும். ஆனால், மேகேதாட்டுவில் கர்நாடகம் அணையை கட்ட முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத திமுக அரசுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எதைப் பேச வேண்டுமோ அதைத் தான் பேசி வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் அனுமதியின்றி மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. அதனால் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவேன் எனக் கூறி வருகிறார். அரசியலுக்காக இது போல பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்கக்கூடாது. மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட முயற்சி நடைபெற்றால் அதற்கு கட்சி பாகுபடின்றி தமிழ்நாடே எதிர்க்கும்.
மத்திய அரசு கூட்டுறவு சங்க மசோதாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். அவ்வாறு செய்யக் கூடாது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு பொது சிவில் சட்டத்தை அராஜகமாக கொண்டுவர முயற்சிக்கின்றனர். மத்திய அரசு எல்லா கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடக்கிறது. மத்திய அரசு அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.