திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கிய நிலையில் அதற்கான காரணத்தை கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்.
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டுவிட்டர். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது, போட்டோக்கள் மற்றும் வீயோக்களை ஷேர் செய்வது என பலவற்றுக்கும் மக்கள் டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என அனைத்தின் மூலம் டுவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டுவிட்டர் சமூக வலைதளம் நேற்று மாலை திடீரென முடங்கியது. நேற்று மாலை 5.52 மணியில் இருந்து டுவிட்டர் தளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பயனாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதையடுத்து #TwitterDown #RIPTwitter ஆகிய ஹேஷ்டேக்குகளையும் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர். டுவிட்டர் வலைதளம் முடக்கப்பட்டது குறித்து சரியான விளக்கம் தரப்படாததால், டுவிட்டரை பயன்படுத்தும் நெட்டிசன்கள் குழம்பி போயினர். பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலன் மஸ்க், டுவிட்டரின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதால் இந்த சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
ஏற்கனவே இதுபோன்று இரண்டு முறை டுவிட்டர் சமூக வலைதளம் முடங்கியது. எலன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக புளு டிக் வெரிஃபைட் வசதி பெற கட்டணம் செலுத்த வேண்டும் என பல அதிரடி மாற்றங்களை அறிவித்தார். பின்னர் டுவிட்டரின் லோகோவான குருவியை மாற்றிவிட்டு நாய்க்குட்டியை வைத்தார். ஆனால் அதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததால் அந்த முடிவை பின்வாங்கிய எலன் மஸ்க், பின்னர் மீண்டும் குருவியை லோகோவாக வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.