அமெரிக்காவுக்கு எதிராக சீனா போருக்கு ரெடியாகி வருகிறது: நிக்கி ஹேலி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு வித மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிக்கி ஹேலி, சீனா குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் இப்போது பைடன் அதிபராக இருக்கும் நிலையில், அடுத்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும், இப்போதே அங்குத் தேர்தல் குறித்த நடவடிக்கை ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தான் முக்கியம். ஆளும் ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை பைடன் போட்டியிடுவது உறுதியாகவிட்டது. குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடப் பலர் ரேஸில் உள்ளனர். பொதுவாக அங்கே ஒவ்வொரு தேர்தலிலும் பல தலைவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்குக் கட்சிக்குள் தேர்தல் நடைபெறும். அதாவது குடியரசு கட்சி சார்பில் 3 தலைவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே மாகாண வாரியாக பல கட்ட தேர்தல் கட்சிக்கு உள்ளேயே நடக்கும். இதில் யார் டாப் இடத்தில் வருகிறாரோ அவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். AD குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், மைக் பென்ஸ் என்று பலரும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். அப்படி அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிக்கி ஹேலி, சீனா குறித்து சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வரும் நிலையில், நிக்கி ஹேலி கூறியுள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

சீனா தனது ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தி வரும் நிலையில், நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார். சீனா தனது ராணுவ மற்றும் கடற்படை தொழில்நுட்பத்தை வேகமாக வளர்த்து வரும் நிலையில், அமெரிக்காவிற்கு இது கடுமையான அச்சுறுத்தலாக மாறலாம் என்று ஹேலி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “சீனாவின் ராணுவ கட்டமைப்பைக் கொஞ்சம் பாருங்கள். இப்போது உலகிலேயே வலுவான கடற்படையைக் கொண்ட நாடாகச் சீனா இருக்கிறது. அவர்களிடம் 340 கப்பல்கள் உள்ளன. நம்மிடம் 293 கப்பல்கள் தான் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் அவர்களிடம் இருக்கும் கப்பல் எண்ணிக்கை 400ஆக அதிகரிக்கும். ஆனால், 20 ஆண்டுகள் ஆனாலும், நமது எண்ணிக்கை 350ஐ கூட தொடாது. அவர்கள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நாம் இப்போது தான் இது குறித்து யோசிக்கவே ஆரம்பித்துள்ளோம்.

பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமெரிக்காவை விடச் சீனா வேகமாக முன்னேறி வருகிறது. சீனா தங்கள் ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறார்கள். சைபர், ஏஐ துறைகளில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.. நாம் இதில் ரொம்பவே பின்னால் இருக்கிறோம். நாம் இப்போது முதலில் ராணுவத்தைப் பலப்படுத்த வேண்டும். சரியான முறையில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எதிராகச் சீனா போருக்குத் தயாராகி வருவதாகவும் சொல்லி பகீர் கிளப்பியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த பல ஆண்டுகளாகவே சீனாவின் நடவடிக்கையை நீங்கள் பாருங்கள். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போருக்கு ரெடியாகி வருவது தெளிவாகத் தெரிகிறது. சீனா விவகாரத்தில் நாம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால் நாளை என்ற ஒன்றே இல்லாமல் போகிவிடும்” என்றார்.

முன்னதாக கடந்த வாரம் அதிபர் ஹேலி ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அதில் அமெரிக்காவுக்குச் சீனா வெறும் போட்டியாளர் மட்டுமில்லை என்றும் கம்யூனிஸ்ட் நாடான சீனா ஒரு எதிரி என்றும் அழைத்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையாகச் சீனா மாறியுள்ளதாகவும் தான் அதிபரானால் சீனா உடனான வர்த்தகம் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.