பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் கர்நாடகா தேர்தல் நிலை நாடு முழுவதும் ஏற்படும்: ஜவாஹிருல்லா

பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால், கர்நாடகா நிலை நாடு முழுவதும் எதிரொலிக்கும் என்று மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா கூறினார்.

மதுரையை அடுத்த அவனியாபுரம் வந்த மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறியதாவது:-

மத்திய சிவில் சட்ட வாரியம், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது குறித்து, சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் இருவேறு சட்டங்கள் இருக்க முடியாது என கூறியிருக்கிறார். 9 ஆண்டு ஆட்சியில் தோல்வி அடைந்த பாஜ, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தும் வகையில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறது. இதை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பாஜ கூட்டணி கட்சியினரும் எதிர்க்கின்றனர்.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என மோடி நினைக்கிறார். அது பகல் கனவாக மாறும். கர்நாடகாவில் ஹிஜாபை அகற்ற சட்டம் கொண்டுவந்து ஆட்சியை இழந்தது போன்ற நிலை, நாடு முழுவதும் பாஜவிற்கு உருவாகும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இனி அந்தர் பல்டி ரவி என்று தான் அழைக்க வேண்டும். பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் மாநாடு மிகப்பெரிய மாற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.