எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்று சுப்ரியா சுலே தெரிவித்தார்.
மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் நேற்று இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப கடினமாக உழைப்போம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் தேசியவாத காங்கிரஸ் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. இனி சரத் பவாரின் அந்தஸ்து மேலும் உயரும். இதற்குப் பிறகுதான் எங்கள் நம்பகத்தன்மை உயரும். அஜித் பவாருக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். என்னால் ஒருபோதும் எனது மூத்த சகோதரருடன் சண்டையிட முடியாது. ஒரு சகோதரியாக அவரை எப்போதும் நேசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.