சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டது வேதனையை தருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தை முகமது மகிரினுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சினைகள் இருந்துள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைக்கு இரு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் கை திடீரென நிறம் மாறத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் உறவினர்கள் செவிலியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை என கூறிவிட்டனர். இதையடுத்து கை முழுவதும் நிறம் மாறிய நிலையில் குழந்தையை உறவினர்கள் நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வலது கையை உடனடியாக அகற்ற வேண்டும். குழந்தையின் உயிருக்கு ஆபத்து என கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து தோள்பட்டை வரை முற்றிலுமாக அகற்றப்பட்டது.
டிரிப்ஸில் தவறான மருந்தை கலந்ததே குழந்தையின் கை அழுகியதற்கு காரணம் என்றும், கை சிறிய அளவில் நிறம் மாறும் போதே செவிலியர்களிடம் சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதுமே காரணம் என்றும் குழந்தையின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஏழைகள் தனியார் மருத்துவமனையில் செலவு செய்து சிகிச்சை செய்ய முடியாது என்பதால்தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் அங்கோ இது போன்ற அலட்சியப்போக்கு நடப்பதாக பலர் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்துஅமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. Hydrocephalus என்ற பாதிப்பின் காரணமாக தலையில் இருந்து நீர் வடிந்ததால் அந்த குழந்தைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நிலையில், தவறான சிகிச்சையால் வலது கை பாதிக்கப்பட்டு, கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறான சிகிச்சைகள் நடந்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆகவே, மக்கள் உயிர் சார்ந்த இந்த பிரச்னையில் அலட்சியம் காட்டாமல் இந்த தவறுகள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு அறிய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்க முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமாகும். மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான கர்நாடகா அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கும் வகையில் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகின்றேன். மேலும், தமிழகத்துக்குத் தர வேண்டிய உரிமையை தராததோடு, மழைவெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்து விடும் கர்நாடகா அரசு, தமிழகத்தின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணைகட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகமாகும்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் சூழலில், குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியுமா என டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில், கர்நாடகா விடுவிக்க வேண்டிய தண்ணீரை காவிரி மேலாண்மை வாரியம் வாயிலாக பெறவும், கர்நாடகா அரசுக்கு எதிராக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கவும் முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.