மாற்றுத்திறனாளிகள் பற்றி பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் திருமாவளவன்!

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை திருமாவளவன் மேடையில் கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில் அவர் தற்போது அதற்காக வருத்தம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு உள்ள திருமாவளவன், “கடந்த சூன்-30 அன்று மேலவளவில் நடந்த “மேலவளவுப் போராளிகளின் வீரவணக்க நினைவேந்தல்” நிகழ்வில் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் மனம்நோகும் வகையில் ஓரிரு சொற்கள் தவறி விழுந்துவிட்டன. அப்போதே அதற்கு எனது வருத்தத்தையும் தெரிவித்தேன்.

மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிற இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. நான் ஒருபோதும் மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத்தும் உள்நோக்கமோ, அவர்களைப்பற்றி இளக்காரமான மதிப்பீடோ கொண்டவனுமில்லை. இதனை மாற்றுத் திறனாளிகளுக்கான இயக்கத்தை நடத்தும் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் அறிவர்.

என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறுபரப்பும் ஒருசில அற்பர்களைக் கண்டிக்கும் வகையில் நான் ஆதங்கப்பட்டு எனது உரையின் போக்கிலேயே தன்னிலை விளக்கம் அளித்தேன். அப்போது அச்சொற்கள் என்னையும் அறியாமல் தவறுதலாக நா தவறி வந்து விழுந்தன. அதற்காக உடனே எனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினேன். இனி அவ்வாறு நிகழாவண்ணம் பார்த்துக்கொள்கிறேன். வருந்துகிறேன். மாற்றுத்திறனாளிகள் தோழர்கள் பொறுத்தருளவும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

எனக்கு திருமண ஆசை வராதா? எனக்கென்று ஒரு மனைவி உள்ளார்.. எனக்கென்று ஒரு பிள்ளை இருக்கிறது.. நான் வீட்டுக்கு போனால் என் குடும்பத்தை பார்த்து பேச வேண்டும் என்ற சிந்தனை வராதா? நான் என்ன நொண்டியா? முடமா?.. அப்படி சொல்லக்கூடாது. அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. ஒரு புரிதலுக்காக சொன்னேன். என் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்துதான் இந்த களத்தில் நிற்கிறேன்.

நான் எந்த வகையிலும் தாம்பத்திய வாழ்க்கைக்கோ, குடும்ப வாழ்க்கைக்கோ தகுதியற்றவனாக இருக்கிறேன் என்று நினைக்கக்கூடாது. பெருந்தலைவர் காமராஜர் தமிழ் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக தன்னை ஈகம் அளித்துக்கொண்டார். அப்படி யாராவது ஒருவர் இருந்தால்தான் முடியும். ஆனால், அவ்வளவு ஈசியாக இந்த கைகூலி கும்பல் நம்மை இகழ்கிறார்கள்.” என்று கூறி இருந்தார்.

மேடையிலேயே அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்ட நிலையிலும், “நொண்டியா முடமா என்று அவர் பேசியதுடன் வீடியோவை வெட்டி பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து வந்தார்கள். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக போராடி வரும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்நாதனும் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அதில், “இப்படி பேசுவது முறையா திருமாவளவன் அவர்களே? இது போன்று நீங்கள் பேசுவது இது இரண்டாவது முறை? எந்த வகையில் நீங்கள் பேசியது நியாயம்?, உங்கள் நிலையை விளக்குவது சரி அதற்காக “நொண்டி மொடம் என்று இயாலமை சுட்டிக்காட்டி எங்களை கேவலப்படுத்துபடி பேசுவது முறையா? சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை கேட்டீர்கள் சோசியல் கான்சியஸ் இல்லையா என்று! இப்போது நாங்கள் கேட்கிறோம். இதுதான் உங்கள் சோசியல் கான்சியஸா?

ஏன் எங்களுக்கு திருமண ஆசை இருக்க கூடாதா? ஏன் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்து வாழவில்லையா? இப்படி மாற்றுத்திறனாளிகளை குறைத்து பேசுவது உங்கள் தலைமைக்கு அழகா? I am sorry, very disappointing sir! உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உங்கள் போராட்டங்களை நான் பெரிதும் விரும்புபவன் நான். நீங்கள் எங்களை இழிவுபடுத்தி பேசியதை சற்றும் விரும்பவில்லை. இது தவறு! மனம் வலித்து எழுதுகிறேன் சார்! இந்த பேச்சுக்கு டிசம்பர் 3 இயக்கம் கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.