தென்பெண்ணையாறு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் விலகல்!

தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகிய இருவர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. இது, அங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டி, கர்நாடக பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், மாநிலங்கள் இடையிலான நதிநீர் விவகாரங்கள் சட்டத்தின் கீழ், நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டது.

நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைக்க, மத்திய அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
மத்திய ஜல் சக்தி அமைச்சகம், உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான முன்மொழிவு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தென்பெண்ணையாறு வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகிய இருவர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.