செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்கக் கூடாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா மற்றும் பரதசக்கரவர்த்தி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் எனவும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி நிஷா தீர்ப்பளித்தார். செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை எனவும் அவரது உடல்நிலை தேறிய பின்னர் அவரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கலாம் என்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் 3வது நீதிபதியாக நீதிபதி கார்த்திகேயனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகவுள்ளதாகவும், எனவே இந்த விசாரணையை 13ம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மீண்டும் வாதங்கள் நடத்தி வழக்கை இழுத்தடிக்கக்கூடாது என்றும், எனவே வழக்கை சனிக்கிழமை ஒருநாளில் விசாரிக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, இந்த வழக்கை சனிக்கிழமை முழு நாள் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவு 1.39 மணிக்கு கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விஷயத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எதையும் மறைக்காமல் வாதிட வேண்டும் என நீதிபதி கேட்டுக் கொண்டார். வழக்கின் புலன் விசாரணை ஆவணங்களை (கேஸ் டைரியை) தாக்கல் செய்ய வேண்டும். வழக்கில் எதையும் மறைக்காமல், அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.