டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்: அண்ணாமலை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோவை சரக டிஐஜி திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு சி.டி. செல்வம் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது:-

கோவை சரக டி ஐ ஜி விஜயகுமார் அவர்கள் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிற நிலையில், உயர் காவல் துறை அதிகாரி, ஐ பி எஸ் பயின்றவர், மன உறுதி படைத்தவர் திடீரென விபரீத முடிவுக்கு சென்றுள்ளது வியப்பளிக்கிறது. தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்றாலும், அலுவல் ரீதியாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளானாரா என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டும். தமிழக காவல் துறை அல்லாத சிபிஐ போன்ற வேறு ஒரு அமைப்பின் மூலம் விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். அப்படி செய்வதனால் மட்டுமே தவறுகள் நடந்திருந்தால் களையப்பட வாய்ப்புள்ளது என்பதோடு, அலுவல் ரிதியாக அழுத்தங்கள் இல்லையென்பது தெளிவாகும் பட்சத்தில் காவல்துறை மீதான சிறு களங்கம் கூட துடைத்தெறியப்படும். இந்த கோரிக்கையை அரசியலாக பார்க்காமல் அரசின் நிர்வாகத்திற்கான ஆலோசனையாக கருதி செயல்படுத்துவது முதல்வருக்கு சிறப்பை தரும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.