தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
அறப்போர் இயக்கம் டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜியின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் புதிய இந்தியா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூ. 397 கோடி அளவிலான மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அரசு அதிகாரிகள் துணையோடு கிட்டத்தட்ட 30 ஒப்பந்தக்காரர்கள், ஒவ்வொரு டெண்டரிலும் ஒரு ரூபாய் கூட மாறாமல் ஒரே தொகையை அனைவரும் ஒப்பந்தப் புள்ளியில் கோரியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆயிரம் டிரான்ஸ்பார்மர் 45 கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்திலும், அனைத்து ஒப்பந்தக்காரர்களும் ஒரே தொகையைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்ததுமே, ஒப்பந்த ஆய்வுக் குழு, இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், சந்தை மதிப்பை விட மிக அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு டிரான்ஸ்பார்மருக்கும். சந்தை மதிப்பை விட சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக அதிக விலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும் கணக்கில் கொண்டால் சுமார் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அனைத்து ஒப்பந்தக்காரர்களும் சேர்ந்து மின்துறை அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சருடன் இணைந்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த ஊழலில் முக்கிய நபரான காசி என்பவர், மின்சார வாரியத்தில் கொள்முதல் நிதிப் பிரிவில் வேலை செய்பவர் என்றும், ஆனால், அலுவலகத்துக்குச் செல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இருந்தபடியே மின்சார வாரிய ஒப்பந்தங்களை முடிவு செய்வார் எனவும் கூறப்படுகிறது. இந்த நபர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஓய்வு வழங்கப்பட்டவர் என்றும் திமுக ஆட்சிக்கு வந்ததும், அவரது பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஊழல் செய்வதற்காகவே, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்தி, அமைச்சர் வீட்டில் இருந்து ஒப்பந்தங்களை முடிவு செய்வது எல்லாம் திறனற்ற திமுக ஆட்சியில் மட்டும்தான் சாத்தியம்.
அமைச்சருக்கும், மின்சார வாரிய நிர்வாகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நேரடித் தொடர்பில்லாமல், 397 கோடி ரூபாய் அளவுக்கான ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக, அமைச்சர், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் காசி உட்பட இதில் தொடர்புடைய மின்சார வாரிய பணியாளர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று. தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். இந்த ஊழல் வழக்கு குறித்த தெளிவான தகவல்கள் அனைத்தையும் வெளிக் கொண்டு வந்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்து நடவடிக்கை கோரியிருக்கும் அறப்போர் இயக்கத்திற்கு, தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அறப்போர் இயக்கத்தின் இந்த புகார் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும்.
தமிழக கவர்னர் மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச்சாட்டிற்கு அவர் அறிக்கை மூலம் பதில் அளித்து உள்ளார். அ.தி.மு.க. வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு அசல் ஆவணங்கள் வைக்கப்படவில்லை. மேலும் பல ஆவணங்கள் இல்லாமல் உள்ளது. அப்படி இருக்கும் போது கவர்னர் எப்படி விசாரணைக்கு அனுமதி அளிக்க முடியும்.
தி.மு.க. நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி பேசும் பேச்சுக்கும், வயதிற்கும் சம்பந்தம் இல்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என்று அவர் கூறி உள்ளார். அரிவாள் யார் பிடித்தாலும் வெட்டும். எனவே ஆர்.எஸ்.பாரதி தமிழகத்தில் பயமுறுத்தி அரசியல் செய்யலாம் என்று நினைத்தால் எங்களிடம் நடக்காது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்.பி.க்களை பெற்று மோடி மீண்டும் 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 39 இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி.
மத்திய அரசின் திட்டத்தால் தான் தமிழ்நாடு எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்தது. புதிய தொழில் நிறுவனங்கள் ஒசூரை சுற்றியே அமைகின்றன. தமிழகத்தின் உள்பகுதிக்குள் வர தயங்குகின்றன. இந்த நிறுவனங்களை நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற பகுதிகளுக்கு கொண்டு வருவதில்தான் வெற்றி உள்ளது.
சுப்பிரமணியசாமியை இதுவரை நான் சென்று பார்த்தது இல்லை. இனி பார்க்க போவதும் இல்லை. யார் ஆசீர்வாதமும் எனக்கு தேவையில்லை. கோவையின் பொறுப்பு அமைச்சராக முத்துச்சாமி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் கோவையின் வளர்ச்சிக்கு செயல்படுவார். முன்பு அண்ணாமலையை அழைத்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இனி அவ்வாறு நடக்காது என்று நினைக்கிறேன்.
கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமர் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளனர். தமிழர் நலனில் கை வைத்தால் எந்த எல்லைக்கும் போவோம் என தி.மு.க. உறுதியாக தெரிவிக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் பயணம் செய்கிறோம். சுமுகமாக போகிறோம். ஊழல் பட்டியல் தி.மு.க. அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியல் கோவையில் விரைவில் வெளியிடப்படும். எல்நினோ காரணமாக பருவ மழை குறைந்துள்ள நிலையில், காவிரி தண்ணீரும் வரவில்லை என்றால் என்னாவது. தமிழக அரசுதான் காவிரியை கொண்டு வர வேண்டும். வானதி சீனிவாசன் மீதான தனிப்பட்ட வன்மத்தை தி.மு.க.வினர் வெளிப்படுத்துகின்றனர். இதைப்பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
