மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வெடித்த வன்முறையில் போலீஸ் கமாண்டோக்கள் உட்பட 4 பேர் உயிரிழந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3000திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இன்னும் 60 ஆயிரம் பேர் அங்குள்ள 340 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டு விட்டன. மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. 40,000த்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை வீரர்களை குவித்தும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று 4 நாள் தங்கி சமரச முயற்சி மேற்கொண்டும், மணிப்பூர் இன்றும் பற்றி எரிகிறது.
இந்த நிலையில் பிஷ்ணுபூரில் நேற்று கிளர்ச்சியாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி கொல்லப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து பிஷ்ணுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் எல்லைக்கு அருகே உள்ள கிராமங்களில் நடந்த வன்முறையில் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையை அடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று மோதலை கட்டுப்படுத்தினர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.