தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 238 காங்கிரஸார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார் கே.எஸ்.அழகிரி. அவருடன் திரளான காங்கிரஸ் தொண்டர்களும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
சென்னை எழும்பூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலிலும் யாருடைய தலையீடும் இல்லாமல் காவல்துறையினர் காங்கிரஸார் மீது இந்த வழக்கைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.