முதல்வர் சொல்வதை ஆளுநர் செயல்படுத்த வேண்டும். ஆளுநர் – முதல்வர் இடையே ஈகோ இருக்கக்கூடாது என அன்புமணி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம். அதில் முதலமைச்சர் பங்கேற்கலாம். அந்தக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும். தமிழ்நாடு ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆளுநர் நடுநிலையாகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும். முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைச் செயல்படுத்த வேண்டியது ஆளுநரின் கடமை. இருவருக்கும் இடையே ஈகோ இருக்கக்கூடாது. அரசியல் சார்பு இருக்கக்கூடாது. ஆளுநரின் அரசியல் சார்பு என்னவாக இருந்தாலும் அதனை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி சார்பு கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. நீதிபதி, ஜனாதிபதி போல, ஆளுநர் இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், கொள்கைகள் பற்றி பேசக்கூடாது. தவறு நடந்தால் தட்டிக் கேட்கும் அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், ‘மாமன்னன்’ திரைப்படம் பார்த்திவிட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அன்புமணி ராமதாஸ், “பார்க்கவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய செய்தியாளர், பல அரசியல் கட்சியினரும் இந்தப் படம் குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் நீங்கள் பார்க்கவில்லை என்கிறீர்கள், ஏற்கனவே பாமக ஒரு சாதிய கட்சி என்று பெயர் இருக்கும்போது.. என்று தொடர்ந்தார். உடனே கோபமாக குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார் சொன்னது? எந்த மக்கள் சொன்னது? அது உங்கள் மனதில் இருக்கும் வன்மம். மக்கள் அப்படி நினைக்கவில்லையே. உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொல்கிறீர்கள். இப்படியே உங்கள் வன்மத்தை கக்கிக் கக்கி தமிழ்நாட்டில் நாங்கள் செய்த சாதனைகளை மறைக்கிறீர்கள். மக்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லி உங்கள் எண்ணத்தைத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். தமிழ்நாட்டில் உள்ள எந்தக் கட்சியில் பொதுச் செயலாளராக தாழ்த்தப்பட்டவர் இருக்கிறார்கள்? ஒருவரை சொல்லுங்கள் பார்க்கலாம். இவ்வளவு காலமாக இருந்தார்களா? நாங்கள் முதல் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலித் எழில்மலைக்கு 1998ல் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தோம். திமுக 1999ல் தான் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தது. நாங்கள் கொடுத்த ஒரு வருடத்திற்குப் பிறகு தான் ஆ.ராசாவுக்கு அமைச்சர் பதவி திமுக கொடுத்தது. எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகம் செய்த கட்சி திமுகவோ, அதிமுகவோ, வேற எந்தக் கட்சியோ கிடையாது, பாட்டாளி மக்கள் கட்சிதான். நாங்கள் பட்டியல் போட்டால் எவ்வளவோ இருக்கிறது. அவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோம். எனவே உங்கள் மனதில் இருக்கும் வன்மத்தைக் கக்க வேண்டாம். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அதை 2026ல் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.