நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூட இருக்கும் இந்லையில் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அழைப்பு விடுத்து உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்க உள்ளது. ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரே புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம் இந்த கூட்டத் தொடரில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை ஜூலை 14 ஆம் தேதி வரை ஆன்லைனில் தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்து இருந்தது. தொடர்ந்து அது தொடர்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று உள்ள அதிமுகவும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்த விவகாரம் மட்டுமின்றி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தின் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களை சந்தித்து அர்விந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்த நிலையில் அதுவும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் வகுப்புவாத மோதல்கள், பழங்குடியின கிறிஸ்துவ மக்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதிக்க வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசு விவாகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தலையீடு குறித்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள், நீட் விலக்கு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கேள்வி எழுப்பும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 14-7-2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருள்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து” என்று குறிப்பிட்டு உள்ளார்.