வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கான கால்கோள் விழா நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே உள்ள திடலில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடக்கிறது. இதற்கான கால்கோள் விழா பூஜை நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கே.பி.முனுசாமி பேசுகையில், ”அதிமுக மாநாட்டில் மதுரை மாவட்டத்தில் இருந்து மட்டும் 3 லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டிற்குப் பிறகு திமுகவை தவிர மற்ற கட்சிகள், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமியின் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள். இந்த மாநாடு அன்று அதிமுக தொண்டர்கள் யாரும் வீட்டில் இருக்கக்கூடாது. குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்று கட்சிக்கு பலமும், பெருமையும் சேர்க்க வேண்டும். இந்த மாநாட்டின் தாக்கம் மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், ”கட்சித் தலைமை மாநாட்டை மதுரையில் நடத்த முடிவெடுத்தது நமக்கும், மதுரைக்கும் கிடைத்த பெருமை. இதற்கு முன் எம்ஜிஆர், ஜெயலலிதா இதுபோல் மாநாடுகளை நடத்துவதற்கு மதுரையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர்களை போல் கே.பழனிசாமி நம் மீது நம்பிக்கை வைத்து இந்த முடிவெடுத்துள்ளார். அந்த நம்பிக்கையை காப்பாற்றி, மாநாட்டை வெற்றிப்பெற செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில், ”மதுரை எப்போதுமே அதிமுக கோட்டை. அதிமுகவிற்கு திருப்பம் தரக்கூடிய மாவட்டம். அதனால் கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், கட்சியை கட்டி காப்பாற்றிய ஜெயலலிதா முதல் தற்போது கே.பழனிசாமி வரை கட்சியின் மிகப்பெரிய மாநாடுகளை, நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மதுரையை தேர்வு செய்துள்ளார்” என்றார்.
முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா பேசுகையில், ”மதுரையில் எத்தனையோ கட்சி நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற மாநாடு பார்த்ததில்லை என்று சொல்கிற அளவிற்கு மாநாட்டை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும்,” என்றார்.
அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்பு செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.வி.சண்முகம், கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன், டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், கரூர் விஜயபாஸ்கர், வளர்மதி, சி.பொன்னையன், வைகைசெல்வன், மாவட்ட வழக்கறிஞர் அணி ரமேஷ், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.