செங்கல்பட்டு பாமக நிர்வாகி வெட்டிக்கொலை: ஒருவரை சுட்டுபிடித்த போலீஸ்!

பாமக நகரச் செயலாளர் நாகராஜன் நேற்றிரவு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் தப்பியோட முயன்ற ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்தது உட்பட 2 பேரை கைது செய்து உள்ளனர்.

செங்கல்பட்டு பாமக நகரச் செயலாளராக இருந்து வந்தவர் நாகராஜ். இவர் செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் இவர் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். மறைத்து வைத்து இருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு அவரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. இதில் நாகராஜன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நாகராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் பாமக நிர்வாகியின் உடல் வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாமக நிர்வாகி வெட்டிக்கொல்லப்பட்டதால் செங்கல்பட்டு பகுதி பதற்றமான நிலையில் உள்ளது. குற்றவாளிகளை கைது செய்யக்கூறி பாமகவினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கொலையில் ஈடுபட்டு இருக்கலாம் எனக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்ற அஜய் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அஜய் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் வந்து போலீசாரை கத்தியால் தாக்க முயன்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது காலில் சுட்டுப் பிடித்ததாக போலீசார் விளக்கமளித்து இருக்கிறார்கள். காலில் காயமடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கைது செய்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதற்றமான சூழல் நிலவி வருவதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 800 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

செங்கல்பட்டில் கடந்த ஒரு மாத்திற்கு முன் மனோகரன் என்ற பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக பாமக நிர்வாகி காளிதாஸ் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்றிரவு நாகராஜன் வெட்டிக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து நடைபெறும் கொலைகளால் செங்கல்பட்டு பரபரப்புடன் காணப்படுகிறது.