திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது.
கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்க திமுக கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன் திருமண மண்டபத்திற்கு இரவு 8 மணியளவில் வருகை தந்து உள்ளார். அவர் மண்டபத்தின் செல்ல முயன்ற நிலையில், திடீரென மர்ம நபர் ஒரு பெட்ரோல் குண்டை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மது பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. விழாவில் மகிழ்ச்சியாக கலந்துகொண்ட பொதுமக்களும், திமுகவினர் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை. திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளே சென்ற நேரத்தில் சரியாக பெட்ரோல் குண்டை வீசியதால் இது அவரை கொல்வதற்காக போடப்பட்ட சதி என்றே கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தீவிர விசாரணை மேற்கொண்டார். எம்.எல்.ஏ. ஐயப்பனுக்கு எதிர்கள் யாராவது உள்ளார்களா? அவருக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முதலில் தொடங்கினர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திருமண மண்டபத்தை சுற்றிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்தனர். இரு சக்கர வாகனத்தில் ஒரு நபர் எம்.எல்.ஏ ஐயப்பன் காரை பின் தொடர்ந்து வந்ததாகவும், அவரே பெட்ரோல் குண்டை வீசியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.