எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்துவதற்கான பிரமாண்ட ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு 15, 16 ஆகிய தேதிகளில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சசிகலா, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் தனது புரட்சிப்பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெருமைகளையும், பெண்ணினத்தின் பாதுகாவலராக விளங்கிய ஜெயலலிதா ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
வருகின்ற 15-07-2023 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்புத்தூர் வழியாக ஈரோடு புறநகர் மாவட்டத்தில் உள்ள பவானி அந்தியூர் பிரிவு சென்றடைந்து, மாலை 4.00 மணியளவில் அங்கிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா. கவுந்தம்பாடி நான்கு ரோடு, கோபிசெட்டிபாளையம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் திடல் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார். அதனைத்தொடர்ந்து மறுநாள் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மணிக்கு திருப்பூர் மாவட்டம் வளர்மதி பேருந்து நிலையிலிருந்து புரட்சிப்பயணத்தை தொடங்கும் கழகப் பொதுச்செயலாளர் சசிகலா திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் மற்றும் அவிநாசி புதிய பேரூந்து நிலையம் அருகிலும் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.
கழகப் பொதுச்செயலாளர் சசிகலா மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், ஜெயலலிதா வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், இளம் சமுதாயத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.