பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்கார வழக்கின் குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்களின் விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கே மிக மோசமான வன்முறையும் கலவரமும் ஏற்பட்டது. இதில் பல நூறு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அப்போது அங்கே பில்கிஸ் பானுவுக்கு மிகக் கொடூரமான சம்பவம் நடந்தது. அப்போது அகமதாபாத் ரன்திக்பூர் என்ற இடத்தில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கொடூரமாகக் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது சிறு குழந்தையும் அடித்தே கொல்லப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசு தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்திருந்தது.
இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், சில பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்கு முன்பு இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு சில குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் வழங்க முடியவில்லை என்றும் குறிப்பாக ஒருவரது வீடு மூடப்பட்டிருப்பதாகவும் அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதேபோல அந்த குற்றவாளிகளின் வழக்கறிஞர்களும் இந்த நோட்டீஸை வழங்கத் தயாராக இல்லை. தாங்கள் இப்போது அவர்களுடன் தொடர்பில் இல்லை என்றும் நோட்டீஸை பெறும்படி தங்கள் மனுதாரர்கள் தங்களை அறிவுறுத்தவில்லை என்பதால் வாங்க முடியாது என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதனால் வழக்கை ஒத்திவைப்பதாக வழக்கை அப்போது விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேஎம் ஜோசப் தெரிவித்தார்.
இதற்கிடையே இப்போது நீதிபதி கேஎம் ஜோசப் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் இரண்டு குற்றவாளிகள் இருந்த முகவரியில் யாரும் இல்லாத நிலையில், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க முடியாமல் போனது. இதையடுத்து அங்கு வெளிவரும் இரண்டு தினசரி குஜராத்தி செய்தித்தாள்களில் குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நோட்டீஸ் குறித்த விளம்பரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விளம்பரத்தை அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை ஜூலை 17, திங்கட்கிழமை ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. வரும் திங்கள்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், அதற்குள் நோட்டீஸ் குறித்த விளம்பரம் உள்ளூர் செய்தித்தாளில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னரே இந்த வழக்கு விசாரணை தீவிரமாக ஆரம்பிக்கும்.