தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. அவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மிலி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மதுவிலக்குத்துறை அமைச்சராக முத்துசாமி அவர்கள் நியமிக்கப்பட்டபோது, மதுவைக் கட்டுப்படுத்துவதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்துவிட்டன.
90 மிலி மது விற்பனை செய்யப்பட்டால். அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும். அதனால், பணம் இல்லாதவர்கள் கூட, குறைந்த தொகையை எளிதாகத் திரட்டி மது வாங்கிக் குடிப்பார்கள் காகிதக் குடுவைகளினால் ஆன மது வகைகள் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஆபத்தும் உள்ளது. அதேபோல், காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது கடுமையான வேலை செய்பவர்களுக்கு உதவாது, மாறாக அவர்கள் காலையிலேயே மது அருந்திவிட்டு, வேலைக்கு செல்லாமல் முடங்கி விடுவார்கள். அதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்துகளையெல்லாம் உணராமல் 90 மிலி மது, காலையில் மது வணிகம் ஆகியவற்றுக்கு ஆதரவாக அமைச்சர் பேசுவது அழகல்ல.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது. 90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தும். எனவே, அத்தகைய திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.