இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு கிறிஸ்தவமயமாக்கி வருகிறார்: எச். ராஜா

இந்து சமய அறநிலையத்துறையை இந்து மதத்திற்கு விரோதமாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு மீது சரமாரியாக குற்றம்சாட்டி பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கும், பாஜகவுக்கும் இடையே சமீபகாலமாக மோதல்போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக, சிதம்பர் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல, இந்து கோயில் நிலங்களை பல திட்டங்களுக்கு அரசாங்கம் கொடுத்து வருவதாகவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் எச். ராஜா கூறியதாவது:-

திமுக அரசு மதசார்பற்ற அரசாங்கமாக இருக்கலாம். ஆனால், இந்து சமய அறநிலையத்துறையும், இந்து கோயில்களும் சட்டப்படியே மதம் சார்ந்தது தான். இந்து மதத்திற்காகவே, இந்து மதத்தை ஊக்குவிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு துறைதான் இந்து சமய அறநிலையத்துறை. ஆனால், இதுவரை எந்த இந்து கோயில்களிலாவது தேவாரம், திருவாசகம் சொல்லித் தரப்படுகிறதா? கிறிஸ்தவர்கள் மட்டும் சுவிஷேசம் பிரசங்கம்னு வீடு வீடா போறாங்கல்ல. அந்த மாதிரி வீடு வீடா இந்து மதத்திற்காக சேகர் பாபு போக வேண்டும். அதற்காகதான் இந்து அறநிலையத்துறையை உன்னிடம் கொடுத்துருக்காங்க. நீ ‘அல்லேலுயா’ கத்துறதுக்காகவா இந்து சமய அறநிலையத் துறையை உன்ட்ட கொடுத்துருக்காங்க? உன் சின்ன எசமான் (உதயநிதியை மறைமுகமாக கூறுகிறார்) நான் கிறிஸ்தவன். என் மனைவி கிறிஸ்தவர்னு சொன்ன உடனேயே சேகர் பாபுவுக்கு உற்சாகம் வந்துருச்சி. அல்லேலூயா அல்லேலூயானு சொல்றாரு. ஆகவே, இந்து அறநிலையத்துறை இப்போது கிறிஸ்தவமயமாக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில் இந்து அல்லாதவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இந்து சமய அறநிலையத்துறையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஸ்டாலின் அரசாங்கம் ஒரு நாகரீகமற்ற அரசாங்கம்.

மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, சிப்காட்டுக்கு கோயில் நிலத்தை இந்த இந்து விரோத சர்க்கார் கொடுத்துருக்கு. இந்த அல்லேலுயா பாபு (சேகர் பாபுவை குறிப்பிடுகிறார்) கோயில் நிலங்களை எல்லாம் காலேஜ் கட்டுறேன். சிப்காட்டு கட்டுறேனு கொடுத்துட்டு இருக்காரு. இது சட்ட விரோதமானது. சேகர் பாபுவை நான் எச்சரிக்கிறேன். கோயில் நிலத்தை எடுத்தால், உங்க வீட்டுக்கு நாங்க வந்து உட்கார வேண்டியிருக்கும். இந்து கோயிலில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்களுக்கு எப்படி கொடுப்பீங்க.. மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் ஜாக்கிரதை. இவ்வாறு எச். ராஜா பேசினார்.