பொது சிவில் சட்டம்: கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு திருமாவளவன் அனுப்பியுள்ளார்!

பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இன்றுடன் இது குறித்த கருத்துக்கேட்பு கால அவகாசம் நிறைவுறுகிறது. இந்நிலையில் விசிக தரப்பின் கருத்துக்களை சட்ட ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் அனுப்பியுள்ளார்.

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மதத்தினரையும் ஒரே மாதிரியான சட்டத்திற்குள் கொண்டு வர பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது. பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளில் இந்த சட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த பொது சிவில் சட்டம் குறித்து பேசினார். இதனையடுத்து இது குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க தொடங்கின. கடந்த மாதம் 14ம் தேதி 22வது சட்ட ஆணையம் இது குறித்து கருத்து தெரிக்குமாறு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஏற்கெனவே 21வது சட்ட ஆணையம் இந்த பொது சிவில் சட்டம் குறித்து எதிர்மறையான கருத்தை கூறியிருந்த நிலையில் தற்போது மீண்டும் இது குறித்து சட்ட ஆணையம் கருத்து கேட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அதேபோல இஸ்லாமிய அமைப்புகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில், நாட்டில் உள்ள பல்வேறு மதத்தினர் தங்களுக்கென தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், மத அடிப்படையில் அல்லாமல், அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான சட்டத்தை கொண்டு வரப்போகிறோம் என்று பாஜக அரசு அறிவித்து இருந்தாலும், நடைமுறையில் இஸ்லாமியர்களை குறிவைத்தே, பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்களை துவங்கியுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனம், சாதி, மதம், பண்பாடு, பழக்க வழக்கங்களைக் கொண்ட நாட்டிற்கு ஒரே மாதிரியான சட்டம் என்பது சரிவராது, மாறாக அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாக முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளை கடந்து சீக்கியம், புத்தம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்களும் இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 22வது சட்ட ஆணையம் அறிவித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தற்போது வரை சுமார் 50 லட்சம் கருத்துக்கள் இந்த பொது சிவில் சட்டம் குறித்து வந்திருக்கின்றன. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி இச்சட்டம் குறித்து தனது கருத்தை சட்ட ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதில், பல்வேறு பாயிண்டுகளாக பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். முதல் பாயிண்ட்டில் ஏற்கெனவே 21வது சட்ட ஆணையம் இந்த பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தபோதிலும், ஏன் இரண்டாவது முறை தற்போது கருத்து கேட்பு நடத்தப்படுகிறது என்பதை விளக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல இந்து மதத்தின் மேலாதிக்க நடைமுறைகளை, சிறுபான்மை மதங்களின் மீது திணிப்பதன் மூலம் அவர்களின் மத பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு சவாலை உருவாக்குவது என்பது, சிறுபான்மை மதங்கள் பல நூற்றாண்டுகளாகப் போற்றிப் பின்பற்றி வந்த வளமான மரபுகள் மற்றும் பழங்கால பழக்கவழக்கங்களை புறக்கணிப்பதை போன்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

அடுத்தடுத்த பயிண்ட்டுகளில், “பழங்குடி மக்கள், பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் மதிக்கப்பட வேண்டிய தனித்துவமான பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சமூக கட்டமைப்புகளைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த பொது சிவில் சட்டம் பழங்குடி சமூகங்களின் கலாச்சாரத்தை சிதைத்தை மேலும் அவர்களை ஓரம் கட்டும். அதேபோல இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள எந்த ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உள்ள உரிமையை இந்த பொது சிவில் சட்டம் மறுக்கிறது. இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையால் பாதுகாக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளை இந்த பொது சிவில் சட்டம் பறிக்கிறது. அனைத்து மதங்களுக்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் பாஜக அரசு, அதற்கு முன்னர் இந்துக்களுக்கிடையில் ஒரே மதம் ஒரே குடியிருப்பு; ஒரே மதம் ஒரே மயானம் எனக் கொண்டுவர வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.