உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி!

உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரான்ஸ் நாட்டில் இன்று ( ஜூலை 14ஆம் தேதி) பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் இங்கு இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார். தொடர்ந்து பிரதமர் மோடி பிரான்சில் உள்ள எலிசி அரண்மனைக்குச் சென்றார். அங்கு பிரதமர் மோடியை அதிபர் இம்மானுவல் மேக்ரான் உற்சாகமாக வரவேற்றார். அவரது மனைவி பிரிகர் மேக்ரானும் உடனிருந்தார். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். இராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும். இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களால் பெறப்பட்டது. இவர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், புட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் உள்ளிட்டோர் அடங்குவர்.

பிரதமர் புறப்படுவதற்கு முன்பாக மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்றுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, ரஃபேல் எம் (Rafale-M) என்ற கடற்படையில் செயல்படும் 26 போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ரஃபேல் போர் விமானங்களின் ஒருவகை என்பது கவனிக்கத்தக்கது. இதில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மடிக்கக்கூடிய இறக்கைகள், அதிகப்படியான வலுவை தூக்கி செல்லும் பகுதி உள்ளிட்டவை முக்கியமானவை. இதுதவிர இந்தியாவில் ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல் கட்டுமானங்களை அமைக்கும் ஒப்பந்தத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு ஒப்பந்தங்களும் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் இங்கு இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றிய அவர், வெளிநாட்டில் ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று கேட்கும் போது, நான் வீட்டிற்கு வந்துவிட்டதாக உணர்கிறேன் என்று அவர் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது:-

நான் பலமுறை பிரான்ஸ் வந்துள்ளேன் ஆனால் இம்முறை எனது வருகை சிறப்பானது. இன்று பிரான்சின் தேசிய தினம். பிரான்ஸ் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அழைத்த பிரான்ஸ் மக்களுக்கு நன்றி. இன்று பிரான்ஸ் பிரதமர் என்னை விமான நிலையத்தில் வரவேற்றார், நாளை (இன்று) எனது நண்பர் இம்மானுவேல் மக்ரோனுடன் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்வேன். இது இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள உடைக்க முடியாத நட்புறவின் பிரதிபலிப்பாகும். பருவநிலை மாற்றம், விநியோகச் சங்கிலிகள், தீவிரவாதம் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு என எதுவாக இருந்தாலும், உலகம் இந்தியாவையே பார்க்கிறது. இன்று உலகம் புதிய உலக ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இந்தியாவின் பங்கு வேகமாக மாறி வருகிறது.

இந்தியா தற்போது G20 தலைவராக உள்ளது, முழு G20 குழுவும் இந்தியாவின் திறனைப் பார்க்கிறது. இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மையின் வலுவான அடித்தளம் மக்கள்-மக்கள் இணைப்பு. 21ம் நூற்றாண்டின் பல சவால்களை இந்தியாவும் பிரான்சும் சமாளிக்கின்றன. எனவே, இந்த முக்கியமான நேரத்தில், நமது நாடுகளுக்கு இடையிலான மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த 25 ஆண்டுகளில் ஒரு வளர்ந்த நாடாக மாறும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான இடம் இருக்கிறது என்று சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் இனி பிரான்சில் UPI பேமெண்ட் முறையைப் பயன்படுத்தி இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். பிரான்சில் UPIஐப் பயன்படுத்த இந்தியாவும் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளன. இனி ஈபிள் கோபுரத்தில் இருந்து இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாய்களில் கட்டணங்களை செலுத்த முடியும்.

ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 10 முதல் 15 ஆண்டுகளில் 42 கோடி இந்தியர்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே கொண்டுவரப்பட்டுள்ளனர் என கூறியிருக்கிறது. இந்த எண்ணிக்கை ஐரோப்பாவின் மக்கள்தொகையை விட அதிகம், அமெரிக்காவின் மக்கள்தொகையை விட அதிகம். உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும். பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சுக்கான யுத்தத்தில் இந்திய வீரர்கள் ஈடுபட்டனர். பிரெஞ்சு மண்ணில் நிகழ்ந்த யுத்தத்தில் பங்கேற்று பிரெஞ்சு மண்ணில் இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இங்கு நடந்த போரில் பங்கேற்ற படைப்பிரிவுகளில் ஒன்றான பஞ்சாப் ரெஜிமென்ட் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.