மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரவும், சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். பிரதமரின் இந்தப் பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடங்கிப் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இதற்கிடையே அங்கே மற்றொரு பிரான்ஸ் நகரமான ஸ்ட்ராஸ்பர்க்கில், ஐரோப்பியப் பாராளுமன்றம் மணிப்பூரில் வன்முறை தொடர்பாகவும் மத சிறுபான்மையினர் தொடர்பாகவும் சில கரத்துக்களை தெரிவித்துள்ளது. மணிப்பூரில் வன்முறை தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வரவும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பும் நடவடிக்கைகளையும் இந்தியா உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இதற்கிடையே இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அந்த தீர்மானத்தில், “மணிப்பூரின் கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாக்கவும், சூழல் மேலும் மோசமாகாமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்கள் அங்கே தடையின்றி சென்று வரத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கே இணையச் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கையையும் வாபஸ் பெற வேண்டும். ஐ.நா. பரிந்துரைப்படி ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.
மேலும், விவாதத்தின் போது, ஐரோப்பிய எம்பிக்கள் மணிப்பூர் மற்றும் அதன் சிறுபான்மையினர் குறித்து மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியா குறித்தும் சில கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்குள்ள எம்பி பியெர்ரே, “அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் அனைவரையும் குற்றவாளியாகக் கருதக் கூடாது. இதனை அவர்கள் ஏற்க வேண்டும். இந்தியாவில் உள்ள தலைவர்கள் மனித உரிமைகள் பற்றி விரிவாகவும் வெளிப்படையாகவும் பேச வேண்டும். இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் யாரும் சொல்லவில்லை. இந்தியா ஒரு சிறந்த ஜனநாயகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது மேலும் சிறந்த ஜனநாயகத்தை நோக்கி நகர வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்லாந்தைச் சேர்ந்த எம்பி, அல்வினா அலமேட்சா, “இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறுகிவிட்டது.. பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தவறான காரணங்களுக்காகக் கைது செய்யப்படுகிறார்கள். அங்கே பாகுபாடு மற்றும் வெறுப்பு அதிகரித்துள்ளது. டிசம்பரில் நான் இந்தியாவுக்குச் சென்றபோது இதைத்தான் அங்கே என்னால் பார்க்க முடிந்தது. வர்த்தகம் மட்டுமின்றி இந்தியா-ஐரோப்பிய உறவுகளில் மனித உரிமையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும் என்றும்” என்று அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்தத் தீர்மானத்தைக் கடுமையாக விமர்சித்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இந்தியாவின் உள் விவகாரங்களில் இத்தகைய தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாது. இது காலனித்துவ மனநிலையைப் பிரதிபலிக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் தனது நேரத்தை அங்கே இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பயன்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.