வேங்கை வயல் வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 4 சிறுவர்களின் பெற்றோர்களும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதகழிவு கிடந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 75 பேரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 4 காவல் உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டறிய வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கில் வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் இறையூர் பகுதியைச் சேர்ந்த 3 சிறுவர்கள் என 4 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி வேண்டும் என்று கூறி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 12ம் தேதி நீதிபதி ஜெயந்தி விசாரித்தார். சிறுவர்களுக்காக அவரது பெற்றோர்கள் ஆஜராகினர். இதனையடுத்து வேங்கை வயல் சிறுவன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்து பெற்றோரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் 4 சிறுவர்களும் பெற்றோர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 4 சிறுவர்களின் பெற்றோர்களும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இறுதி தீர்ப்புக்கு வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.