வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள்: கெஜ்ரிவால் வேண்டுகோள்!

வெள்ள நீரில் செல்பி எடுக்க சென்று உயிரிழக்காதீர்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யமுனை ஆற்றின் நீர் ஊருக்குள் புகுந்ததால் டெல்லி நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது தற்போது நீர்மட்டம் குறைந்து வந்தாலும், மீண்டும் கனமழை மிரட்டி வருவதால் வெள்ள அபாயம் நீங்கவில்லை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள புதுடெல்லியில் 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த யமுனை ஆற்றின் நீர்மட்டம் தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்திருக்கிறது. இருப்பினும் மக்களை செல்பி எடுக்கவோ அல்லது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குளிக்கவோ வேண்டாம் என்று புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டர் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று வடமேற்கு டெல்லியின் முகுந்த்பூர் சௌக் பகுதியில் வெள்ளத்தால் தேங்கிய நீரில் குளித்த 3 சிறுவர்கள், பள்ளத்தில் மூழ்கி இறந்தனர். இந்த செய்தி வந்த ஒரு நாளுக்குப் பிறகு முதல்வரின் வேண்டுகோள் வந்திருக்கிறது. அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

சிலர் விளையாடவோ, நீச்சல் அடிக்கவோ, செல்பி எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ வெள்ள நீரில் செல்வதாக பல இடங்களிலிருந்து செய்திகள் வருகின்றன. தயவு செய்து இதை செய்யாதீர்கள். நீங்கள் உயிரிழக்க நேரிடும். வெள்ள அபாயம் இன்னும் தீரவில்லை. தண்ணீர் ஓட்டம் மிகவும் வலிமையானது. நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

சாந்திவன் பகுதியில் குழந்தைகள் வெள்ளத்தில் விளையாடும் ஒரு வீடியோவை இணைத்து பதிவிட்ட கெஜ்ரிவால், “இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும்” என அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பல நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து, நகரின் யமுனை நதியில் நீர்மட்டம் ஆபாய கட்டத்தை தாண்டியது. இதனால் புதுடெல்லியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 208.66 மீட்டராக இருந்த நீர்மட்டம், இன்று காலை 10 மணியளவில் 207.48 மீட்டராக குறைந்துள்ளது. இருப்பினும் அபாய கட்ட அளவை (205.33 மீட்டர்) தாண்டி 2 மீட்டருக்கு மேல் உயர்ந்தது.