ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன்: ராமதாஸ்

பாமகவின் 35வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, கட்சிக் கொடி ஏற்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களைத்தான் கேட்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 35ஆம் ஆண்டு துவக்க நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பாமகவின் துவக்க நாளை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்கள் தான் கேட்பேன். ஒன்று ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழ்நாடு, மற்றொன்று, ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் போய் கலக்கக்கூடாது எனக் கேட்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளால் பல லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பதாகவும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை, குற்ற சம்பவங்கள், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகவும், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தக் கோரியும் பாமக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் 35வது ஆண்டு துவக்க நாள் விழாவிலும் ராமதாஸ் மதுவிலக்கு குறித்துப் பேசியுள்ளார்.