எங்களிடம் வருபவர்களை நாங்கள் தூய்மையாக மாற்றிவிடுவோம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை மாநிலத்தின் உரிமையை முதல்வர் ஸ்டாலின் காவு கொடுக்கிறார். காவிரி நதி நீர் பிரச்சினை உயிர் நாடி பிரச்சினை. இதில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடுநிலை வகித்ததால்தான் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைந்தது. ஆண்டுதோறும் காலதாமதம் இல்லாமல் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்றால் அதன் பெரும் பலன் பாஜகவையும் பிரதமர் மோடியையுமே சாரும்.
இரு மாநிலங்களுக்கு இடையே நதி நீர் பிரச்சினையில் பொதுவான நியாயமான வழியில் பாஜக நிற்கிறது.
மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என கடந்த ஆட்சியில் கர்நாடகா பாஜக சொன்ன போது, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்து தமிழக விவசாயிகளின் நியாயத்தின் பக்கம் நின்றது. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும் என காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி காலத்தில் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்தது. அதனால்தான் புதிய அணைகள் கட்டப்பட்டு பிரச்சினை எழுந்தது. அந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர் பிரதமர். மக்கள் நலனை விட காவிரி நீராதார உரிமைகளை விட விவசாயிகளின் நலனை விட மாநிலத்தின் உரிமையை விட முதல்வர் ஸ்டாலினுக்கு மோடி எதிர்ப்பு அரசியல்தான் முக்கியமாக இருக்கிறது.
திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த காலத்தில் நடந்தது? நீதித் துறை உத்தரவின் பேரில் புலனாய்வு துறைகள் நடவடிக்கை எடுத்தால் அதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சொல்வதா. இதுதான் சட்டத்திற்கு திமுக கொடுக்கும் மரியாதையா. திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என அழைக்கப்படமாட்டார்கள். திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை புதிதாக கற்பனையாக யாரும் சொல்லவில்லை. அமைச்சரவையை நியமிக்கும் போது முதல்வர் ஸ்டாலின்தான் அமைச்சர்களின் குற்றப்பின்னணியை ஆய்வு செய்திருக்க வேண்டும். அவர்களை தவிர்த்துவிட்டு சரியான பின்புலம் கொண்டவர்களை அமைச்சர்களாக நியமித்திருக்க வேண்டும்.
எதிர்க்கட்சி எம்எல்ஏவிடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் கேட்கிறார்கள். பாஜகவை வாஷிங் மெஷின் என்றார்கள். இப்போது கங்கை நதி என்கிறார்கள், கங்கை நதி புனிதம் என்பதை ஏற்றுக் கொண்டதில் சந்தோஷம்தான். எங்கள் கட்சி வாஷிங் மெஷின்தான், கங்கை நதிதான். எங்களிடம் வந்தால் எல்லாவற்றையும் புனிதமாக்குவோம். எங்கள் கட்சி நேர்மை, அறம், சட்டம் அடிப்படையில் செயல்படுகிறது. அதனால் இங்கு வந்தால் நல்லவர்களாக மாறிவிடுகிறார்கள்.
வானதி எங்கே என மக்கள் மய்ய கட்சியினர் கேட்கிறார்கள். நான் களத்தில்தான் இருக்கிறேன். எம்எல்ஏவாக என்னால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் கமல்ஹாசன் இதுவரை கோவைக்கு வரவில்லை. கமல்ஹாசன் ஷர்மிளாவுக்கு கார் வாங்கிக் கொடுத்தார். அந்த பெண் கோவையை சேர்ந்தவர். அங்கு வந்து கூட காரை கொடுப்பதற்கு கமல்ஹாசனுக்கு நேரமில்லை. நான் 1000 பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்கி தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.