உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு: ஜவாஹிருல்லா

மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொளி, உலக அரங்கில் நம் நாட்டிற்கு பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வேதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:-

குஜராத் மாநிலத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பின் மறுவடிவமாக தற்போது பாஜக ஆளும் மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடி குக்கி இனமக்களுக்கு எதிராக இன அழிப்பு நடைபெற்று வருகின்றது. இதன் உச்சமாகக் கடந்த மே மாதம் நடைபெற்ற குக்கி இன பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை மனசாட்சியுள்ள இந்தியர்களின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது.

மணிப்பூரில் மைத்தி வன்முறை கும்பல் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்தவ பெண்களைச் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொளி வெளியாகி உலக அரங்கில் நம் நாட்டிற்கு பெரும் தலைகுனிவையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த முயன்ற இப்பெண்களின் சகோதரர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் கடந்த மே மாதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிகிறது. நாம் நாகரிக சமூகத்தில் வாழ்கிறோமா? இல்லை பாஜக ஆட்சியில் காட்டுமிராண்டி சமூகமாகத்தான் இருக்கிறோமா? என்கிற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.

இந்த அராஜக சம்பவத்தின் பின்னணியில் மணிப்பூர் மாநில காவல்துறை முதல் தகவல்அறிக்கை பதிவு செய்திருப்பதாகத் தெரிந்தாலும் யாரையும் இதுவரை கைது செய்ததற்கான தகவலை வெளியிடவில்லை. பல மாதங்களாகத் தொடர்ந்து கலவரம் தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் மாநில பாஜக அரசும் ஒன்றிய பாஜக அரசும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்கள் மனங்களில் பகைமையும் வெறுப்பையும் உண்டாக்கி அதன் வாயிலாக அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இந்த செயலை கண்டிக்க வார்த்தையில்லை. இந்த அராஜகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.