மத்திய அரசின் ஆன்லைன் விளையாட்டுச் சட்டங்களின் குறிக்கோளே வருவாய்தான்: ரகுபதி

மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சில திருத்தங்களையும், விதிகளையும் கொண்டு வந்துள்ளது. அதுகூட, இணையவழி சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை, பாதுகாக்கக்கூடிய ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்லனை் தடை சட்டத்தில், தமிழக அரசு தனியாக எந்தச் சட்டமும் இயற்றி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே, சட்ட நிபுணர்கள் யாராவது அதை சுட்டிக்காட்டினால், அதைப் படித்துப் பார்த்து தெரிந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில், சில திருத்தங்களையும், விதிகளையும் கொண்டு வந்துள்ளது. அதுகூட, இணையவழி சூதாட்டங்களை நடத்துகின்றவர்களை, பாதுகாக்கக்கூடிய ஒன்றாகத்தான் அமைந்திருக்கிறது. அரசுக்கு வருவாயைக் கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டுதான் அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால், 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்திருப்பதாக கூறி, அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையில்தான் விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளனர். இது கண்டிக்கத்தகுந்தது என்பதற்காகவும், இந்த இரண்டு வாதங்களையும் மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போது கட்டுப்படுபவர்கள் நாங்கள், நீதிக்கு தலைவணங்க கூடியவர்கள்.

இது மாநில சட்டப்பிரிவு, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப் பட்டியல், மாநிலப் பட்டியல், மத்திய அரசு பட்டியல் என்று உள்ளது. மாநிலப் பட்டியலில் இருக்கக்கூடிய 34,1,6,33 என்ற விதிகளின்படிதான், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்றப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.