மணிப்பூர் வன்முறை விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. மக்களவைத் தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, இடைப்பட்ட காலத்தில் மரணமடைந்த இந்நாள் மற்றும் 11 முன்னாள் உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். பின்னர், அவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடந்து மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், முற்பகல் 11 மணிக்கு மாநிலங்களவைத் தொடங்கியதும் அதன் தலைவர் ஜெக்தீப் சிங் தன்கர் இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாஜகவின் ஹர்வார் துபேவுக்கான இரங்கல் குறிப்பை வாசித்தார். இடைப்பட்ட நாட்களில் உயிரிழந்த முன்னாள், இந்நாள் உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் பகல் 12 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போது மணிப்பூர் நிலவரம் குறித்து அவையில் விதி 267- ன் கீழ் விவாதிப்பது தொடர்பாக உறுப்பினர்களுக்குள் எழுந்த முரண்பாடு காரணமாக அவை மீண்டும் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் “மணிப்பூர்” , “மணிப்பூர்”, “மணிப்பூர் பற்றி எரிகிறது” என்று முழக்கங்கள் எழுப்பினர். இந்தக் கூச்சல்களுக்கு மத்தியில் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி, “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருப்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டோம். மணிப்பூர் ஒரு தீவிரமான விவகாரம். அது குறித்து விவாதம் நடக்கும்போது உள்துறை அமைச்சர் விரிவாக விளக்கமளிப்பார். விவாதம் எப்போது நடக்கவேண்டும் என்று சபாநாயகர் முடிவு செய்வார்” என்றார்.
என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைவிடாமல் முழக்கங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
அதேபோல் மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவாகரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதைத் தொடர்ந்து அவைத் தலைவர் ஜெக்தீப் சிங் தன்கர், அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் தலைவர் மல்லிகார்கஜூன கார்கே அவையில் பேசுகையில், “மணிப்பூர் பற்றி எரிகிறது. பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பிரதமர் அமைதியாக இருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே பேட்டி கொடுக்கிறார்” என்றார்.
முன்னதாக, மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், நேற்று வெளியான கொடூர சம்பவத்தின் வீடியோவுக்குப் பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி பேசுகையில், “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.