சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுதலை!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகிய 3 பேர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்தவழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராகினார். மேலும், கடந்த டிசம்பர் 22ஆம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது என்றும், தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த ஜூன் 27ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகிய மூவரையும் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திலகம் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.