செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை கடந்த மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் 3 அடைப்பு இருந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 26ம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் உள்ளார். அவரை சிறை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

முன்னதாக அமலாக்கத்துறை கைது நடவடிக்கை கண்டித்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்தார். இந்த மனு மீது 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். அப்போது செந்தில்பாலாஜி மீதான கைது நடவடிக்கை சட்டப்பூர்வமானது எனக்கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார். இது செந்தில் பாலாஜிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் அமலாக்கத்துறை விரைவில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதிக்கு எதிராக அந்த மனு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் எனக்கூறி அவரது மனைவி மேகலாவும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல் அமலாக்கத்துறையும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் தான் இன்று உச்சநீதமின்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில், மேல்முறையீட்டு மனுக்கள் மீது அவசரமாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்தப்படும் எனக்கூறி பட்டியலிட கூறியது. அதன்படி செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மீண்டும் செந்தில் பாலாஜி வழக்கு பரபரப்பை ஏற்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.