இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின்படி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்றும் நாளையும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுகிறார் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இலங்கை அதிபராக பதவியேற்றபின் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை அதிபரிடம் வலியுறுத்தக் கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உரிமைகள், சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், கோரிக்கைகள் நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு அரசும், திமுகவும் உறுதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். இலங்கையில் உள்ள தமிழர்கள் இலங்கையின் சமமான குடிமக்களாக, கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டியது அவசியம். இலங்கையில் உள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆக்கபூர்வமான, உறுதியான தீர்வை எட்ட இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அதிபரிடம் எடுத்துச் சென்று, சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை நாட்டுடைமையாக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.