அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். நடைபயணத்தை நிறைவு செய்யும் வரை அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிப்பாரா என்பதும் சந்தேகம் தான் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது:-
நான் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். என் மீது மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்தவர் எனது ஆருயிர் அண்ணன் சிவாஜி கணேசன். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன. நூறாண்டுகள் கடந்தாலும் அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்க இருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “அண்ணாமலை சிவாஜியை விட மிகப்பெரிய நடிகர். பாத யாத்திரை போனால் தானும் ஒரு ராகுல் காந்தி ஆகிவிடலாம் என நினைக்கிறார். இவர் ஒருபோதும் ராகுல் ஆக முடியாது. அதுமட்டுமின்றி பாத யாத்திரையை நிறைவு செய்யும் வரை தலைவர் பதவியில் நீடிப்பாரா என்பதும் சந்தேகம் தான். தமிழ்நாட்டில் என்றுமே பாரதிய ஜனதாவுக்கு இடமில்லை. திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் கூறும் எந்த குற்றச்சாட்டையும் கோர்ட்டில் நிரூபிக்க முடியாது. அண்ணாமலை வெளியிடும் DMK Files எல்லாமே பெயில் ஆகும்” என்றார்.
பாஜக உடனான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “பழனிசாமிக்கு 32 பற்கள் இருக்கிறது என்பதை அப்போது தான் பார்த்தேன். சிரிக்க ஆரம்பித்தவர் வாயை மூடவில்லை. கடைசி நேரத்தில் மோடி உடன் கைகோர்த்துள்ளார். மோடிக்கு ஏற்படும் முடிவு தான் அவருக்கு ஏற்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமலாக்கத்துறை பிரதமர் மோடியின் கைப்பாவையாக இருக்கிறது. யாரெல்லாம் செல்வாக்கு பெற்ற நபர்களாக இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் மிரட்ட அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார். ஒரு விஷயத்தை மோடி மறந்துவிடக் கூடாது. ஒருநாள் மோடி மீது அமலாக்கத்துறை திரும்பும். ஏனெனில் அவர் மீது பல கிரிமினல் குற்ற வழக்குகள் இருக்கின்றன. குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார்? தற்போது எப்படி இருக்கிறார்? என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதானிக்கே சவால் விடும் வகையில் அமித் ஷா மகன் உருவெடுத்துள்ளார். இதென்ன நல்ல வழியில் சம்பாதித்த பணமா?” எனக் கேள்வி எழுப்பினார்.