கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது: துரைமுருகன்

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்தித்தும் பலன் கிடைக்கவில்லை எனவும் துரைமுருகன் கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடையாத காரணத்தால் மேட்டூர் அணை நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். அதுமுதல் தினசரி 1 அடி தண்ணீர் குறைந்து தற்போது 70 அடி தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணையில் உள்ளது. கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு உயர்ந்தும் தமிழகத்தின் பங்கான தண்ணீரை தர மறுக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது விநாடிக்கு 150 அடியாக சரிந்துள்ளது. கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே மேட்டூர் அணை நீர் மட்டம் உயரும். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இரண்டு முறை டெல்லி சென்று திரும்பியிருக்கிறார். 4

காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி நீரினை தமிழத்துக்கு அளித்திட, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி, 19.07.2023 அன்று எழுதிய கடிதத்தை அளித்து, கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தார். இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினை காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறந்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சனையில் தலையிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்குமாறும், நீர்குறைபாட்டை ஈடு செய்யுமாறும், கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட தேவையான அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர், கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்துவதுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்கள்.

இதனையடுத்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய துரைமுருகன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், வெறும் 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறினார். மழை பெய்யாத காரணத்தால் மேட்டூர் அணை வறண்டு வருகிறது. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்க முடியும். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை கடந்த 5ஆம் தேதியே சந்தித்தும் பிரயோஜனமில்லை. இதனால் முதல்வர் அறிவுறுத்தலின் படி மீண்டும் சந்தித்து கடிதம் அளித்துள்ளோம். கர்நாடகா மாநிலம் தண்ணீர் திறந்து விடக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 150 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக சரிந்துள்ளதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.