மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவரை பொதுவெளியிலேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
மணிப்பூர் மாநிலம் கடந்த 3.5.2023-லிருந்து பற்றி எரிகிறது. இரு இனங்களுக்கு இடையே வன்முறை. மணிப்பூர் தலைநகர் இம்பால், அதை ஒட்டியுள்ள சமவெளிப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பழங்குடி அல்லாத மெய்த்தி மக்கள். மலைப் பகுதிகளில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் குக்கி பழங்குடி மக்கள். மற்ற சிறுசிறு பிரிவு பழங்குடிகளும் உண்டு.
இந்நிலையில், மணிப்பூரில் குக்கி பழங்குடி இன சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கவலை அளிக்கிறது; பேரதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் கிராமத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு வன்முறை கும்பலால் கடத்தப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 19 வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணின் சகோதரர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யபட்டுள்ளார். மேலும், ஒரு இளைஞரும் கொல்லப்பட்டுள்ளார்.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன பிறகே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றது கடும் வேதனை அளிக்கிறது. இதனை எந்த விதத்திலும் ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட பெண்களும், கொல்லப்பட்ட இளைஞர்களும் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. எனவே, பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ள நிலையில், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்குள்ளாக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரங்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வர, ஒன்றிய அரசும், அம்மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கும், தலா 30 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக வன்முறை நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க தோன்றுகிறது. ஆக, மணிப்பூர் வன்முறை குறித்து, விரிவான விசாரணை நடத்த ஒன்றிய அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.