ராகுல் காந்தி வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி கவாய் திடீர் கருத்து!

அவதூறு வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து தாம் விலகுது குறித்து திடீரென நீதிபதி கவாய் கருத்து தெரிவித்ததால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரித்தது. இன்றைய விசாரணையின் தொடக்கத்தில், எனது தந்தை (ஆர்பி கவாய், தலைவர், இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு) காங்கிரஸ் கட்சியுடன் 40 ஆண்டுகாலம் நெருக்கமான உறவை கொண்டிருந்தார். காங்கிரஸின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர். என்னுடைய சகோதரரும் தீவிர அரசியலில் இருக்கிறார் என சுட்டிக்காட்டி, தாம் இவ்வழக்கில் இருந்து விலக விரும்புவதை வெளிப்படுத்தினார் நீதிபதி கவாய்.

அப்போது ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்வி, இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். ஆனால் நீதிபதி பிஆர் கவாய், விக்டோரியா கவுரி வழக்கில் இந்த பிணைப்பு ஒரு பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டது என்றார்.

மேலும் மனுதாரர் வழக்கறிஞர் சிங்வி தந்தை, எதிர்தரப்பு வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானியின் தந்தை ஆகியோருடன் என் தந்தை நாடாளுமன்றத்தில் பணியாற்றி இருக்கிறார். நாம் நல்ல நண்பர்கள். இதனை அனைவரும் அறிவார்கள். நாளை இதனால் பிரச்சனை எதுவும் வந்துவிடக் கூடாது. ராம்ஜெத்மலானியுடன் ஜூனியராகவும் வழக்கறிஞர்களில் ஆஜராகி இருக்கிறேன் எனவும் சுட்டிக்காட்டினார் நீதிபதி கவாய். ஆனால் ராகுல் காந்தி மற்றும் புர்னேஷ் மோடி ஆகிய இருதரப்பும் நீதிபதி கவாய் விசாரிப்பதில் தங்களுக்கு பிரச்சனை இல்லை என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி கவாய் விசாரணையை தொடர்ந்தார்.

ராகுல் காந்தியின் வழக்கறிஞர் சிங்வி, இவ்வழக்கில் இடைக்கால நிவாரணமாக உத்தரவிட வேன்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் இடைக்கால உத்தரவு வழங்குவது குறித்து நீதிபதி கவாய் தயக்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் வழக்கு தொடர்ந்தவர் பதில் தர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். ஆனால், ராகுல் காந்தி ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது மற்றொரு நாடாளுமன்ற அமர்வு நடைபெற்று வருகிறது எனவும் அழுத்தம் கொடுத்தார். இருப்பினும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 100 பக்கங்களுக்கு மேல் இருக்கிறது என்றார் நீதிபதி கவாய்.

ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி தரப்பில் ஆஜரான மகேஷ் ஜெத்மலானி, தங்கள் தரப்புக்கு 10 நாட்கள் அவகாசம் கோரினார். இதனையடுத்து புர்னேஷ் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு இவ்வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.